மானாமதுரையை நகராட்சியாக அறிவித்ததற்கு கவுன்சிலர்கள் வரவேற்பு
மானாமதுரையை நகராட்சியாக அறிவித்ததற்கு கவுன்சிலர்கள் வரவேற்று உள்ளனர். யூனியன் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவித்தனர்.
மானாமதுரை,
யூனியன் கூட்டம்
மானாமதுரை யூனியன் கூட்டம் யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரஜினிதேவி, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் யூனியன் துணை சேர்மன் முத்துச்சாமி (தி.மு.க.) கூறுகையில்:-
மானாமதுரை நகராட்சி அறிவிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நகராட்சிக்கு கிராமப்புற பகுதிகளை முழுமையாக எடுக்காமல் நகர் பகுதிக்குள் வரும் சில பகுதிகளை மட்டும் எடுக்கலாம் என்றார்.
அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ருக்குமணி பேசுகையில், ராஜகம்பீரம் பகுதியில் தனிநபர் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும், இதே போல் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் சாலை வசதி செய்து தர வேண்டும். மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பைபாஸ் பகுதியில் இறக்கி விடுவதால் அங்கிருந்து ஊருக்குள் வரும் பாதையில் மின் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
மரக்கன்று
தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை பேசும் போது, மானாமதுரை ஒன்றியத்தில் செயல்படும் பள்ளிகளில் மரக்கன்று நட நடவடிக்கை எடுக்க வேண்டும். யூனியனில் இருந்து மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.
முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் (கம்யூனிஸ்டு):- சிவகங்கையில் இருந்து கீழபசலை கிராமத்திற்கு வரும் பஸ்கள் தற்போது வருவதில்லை. இதனால் பொதுமக்கள் ஆட்டோவுக்கு 10 ரூபாய் கொடுத்து செல்கின்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. பஸ் வந்தால் மக்கள் பயன் அடைவார்கள் என்றார். மேலும் பல்வேறு கவுன்சிலர்கள் பேசினார்கள். மானாமதுரையை நகராட்சியாக அறிவித்ததற்கு பல்வேறு கவுன்சிலர்கள் வரவேற்று உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.
முடிவில் யூனியன் மேலாளர் தவமணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story