சொத்து பிரச்சினையில் மகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


சொத்து பிரச்சினையில் மகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 7 Sept 2021 1:32 AM IST (Updated: 7 Sept 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

சொத்து பிரச்சினையில் மகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

பயங்கர வெடிச்சத்தம்
அரியலூர் மாவட்டம், புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் அபிபுல்லா(வயது 45). இவரது மனைவி அமீனாபீபி(40). இவர்களுக்கு 3 மகள்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. வெளிநாட்டில் வேலை பார்த்த அபிபுல்லா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். தற்போது அவர் ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் அவர், தனது மனைவி மற்றும் இளைய மகள் ஹாசிநூரா(19) ஆகியோருடன் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போடப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் அபிபுல்லா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 11 மணியளவில் அவரது வீட்டின் முன்பு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அபிபுல்லா வெளியே வந்து பார்த்தார். அப்போது, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி கிடந்தன. மேலும் பெட்ரோல் பாட்டில்கள் எரிந்து கொண்டிருந்தன.
பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள்
இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து எரிந்து கொண்டிருந்த பெட்ரோல் பாட்டில்கள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தார். பின்னர் வீட்டை சுற்றி பார்த்தபோது, சமையலறையின் வெளிப்புறம், பின்பக்க வாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் நிரப்பட்ட மேலும் 3 பாட்டில்கள், பழைய காகிதங்கள் கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் மோப்ப நாய் ‘டிக்சி’, கைரேகை நிபுணர் துர்காதேவி ஆகியோருடன் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தார். போலீஸ் மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது.
தந்தை கைது
மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், அபிபுல்லாவின் தந்தையான ஜெய்னுலாப்தீன்(75) என்பவர், மகனுக்கு சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், அபிபுல்லாவை குடும்பத்துடன் கொலை செய்யும் நோக்கில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜெய்னுலாப்தீன் மீது இந்திய தண்டனை சட்டம் 285-ன் (மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருளை வைத்திருத்தல்) கீழ் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story