மதுவிலக்கு போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த கார் திருட்டு


மதுவிலக்கு போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த கார் திருட்டு
x
தினத்தந்தி 7 Sept 2021 1:32 AM IST (Updated: 7 Sept 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

மதுவிலக்கு போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த கார் திருட்டுபோனது.

பெரம்பலூர்:

கார் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலமாத்தூரில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த மேலமாத்தூரை சேர்ந்த பாலன் மகன் சுதாகர் (வயது 33), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்த மெய்யப்பன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மெய்யப்பனுக்கு சொந்தமான காரை பறிமுதல் செய்த குன்னம் போலீசார், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு அந்த காரை ஒப்படைத்தனர்.
இதற்கிடையே சுதாகர், மெய்யப்பன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை போலீசார் பார்த்தபோது, போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை காணவில்லை. போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த கார் திருட்டு போன சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை திருடிச்சென்றது யார்? என்பது குறித்து ெதரிந்து கொள்ள, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது அந்த காரை அதன் உரிமையாளர் மெய்யப்பன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மெய்யப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
கைது
தனிப்படை போலீசார் மெய்யப்பனின் செல்போன் சிக்னலை சோதனை செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் சிக்னல் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகாவில் உள்ள பாலக்குறிச்சியை காண்பித்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மெய்யப்பனை காருடன் கையும், களவுமாக பிடித்தனர். மற்றவர்கள் போலீசார் வருவதை கண்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் காரை மீட்டு, மெய்யப்பனை கைது செய்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொது ஏலத்திற்கு வந்ததால் திருட்டு
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு ஏற்கனவே மெய்யப்பன் அடிக்கடி வந்து, தனது காரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் கெஞ்சி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவினால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் மெய்யப்பனின் காரும் அடங்கும். காரை போலீசார் விடுவிக்காமல், பொது ஏலத்தில் சேர்த்ததால் காரை மெய்யப்பன் திருடிச்சென்றது, அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

Next Story