விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது கார் மோதல்; தலைமை ஆசிரியர்- மகள் உள்பட 3 பேர் படுகாயம்


விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது கார் மோதல்; தலைமை ஆசிரியர்- மகள் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Sept 2021 1:32 AM IST (Updated: 7 Sept 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேட்டில் விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது கார் மோதியதில் தலைமை ஆசிரியர், அவரது மகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

மங்களமேடு:

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 55). இவர் எறையூர் கிராமத்தில் உள்ள பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையில் மஸ்தூர் பணியாளராக வேலை செய்து வருகிறார். இதேபோல் சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(52). இவர் கார்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சவுந்தர்யா(18).
இந்நிலையில் நேற்று காலை ஆறுமுகம் தனது மொபட்டில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் சுவந்தரராஜன், சவுந்தர்யாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்களமேடு வழியாக வந்தார். அந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே ஆறுமுகம் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் சவுந்தரராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது.
3 பேர் படுகாயம்
இதில் அவர்கள் வாகனங்களுடன் நிலைதடுமாறி நின்றனர். அப்போது பின்னால் கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த கார், அந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் ஆறுமுகம், சவுந்தரராஜன் மற்றும் சவுந்தர்யா ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் தாமதமாக வந்ததாக கூறி, மங்களமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story