சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதில் சமரசத்திற்கு இடம் இல்லை; போலீஸ் அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை அறிவுரை


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.
x
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.
தினத்தந்தி 7 Sept 2021 2:45 AM IST (Updated: 7 Sept 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதில் சமரசத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுரை வழங்கினார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதில் சமரசத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுரை வழங்கினார்.

போலீசாருக்கு அதிகாரம்

கர்நாடக போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடக போலீஸ் துறை நேர்மையாக, விசுவாசமாக செயல்படுகிறது. இது தொடர வேண்டும். அப்போது தான் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அளிக்க முடியும். சட்டம்-ஒழுங்கை காப்பதுடன் பொதுமக்களிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு சேவையாற்றவே போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது போன்றவற்றில் போலீசார் சமரசத்திற்கு இடம் அளிக்கக்கூடாது.

ஏராளமான சீா்திருத்தங்கள்

இந்த அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு மூத்த போலீஸ் அதிகாரிகள் மாநாடு இன்று (நேற்று) நடக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் போலீஸ் துறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயஅறிவியல் சோதனை கூடம், காவலர்கள் நியமனம், அவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுப்பது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளுடன் போலீசார் கூட்டு சேர்ந்து செயல்படக்கூடாது. நகரங்களில் ரியல் எஸ்டேட் முறைகேடுகளில் போலீசார் ஈடுபடக்கூடாது. போலீசார் நேர்மையாக பணியாற்ற வேண்டும். உயர் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சாதாரண காவலர்களுடன் நல்ல முறையில் தோழமை எண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பேசும்போது கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். போலீஸ் துறையில் மேல் அதிகாரிக்கு அறிக்கை அளிக்கும் நடைமுறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

படகுகள் கொள்முதல்

போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளை மூத்த அதிகாரிகள் பார்க்க வேண்டும். பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். குற்றம் செய்வோர் மத்தியில் ஒரு விதமான பீதியை ஏற்படுத்த வேண்டும். இந்த துறையின் உள்பாதுகாப்பு பிரிவும் சிறப்பான முறையில் செயல்படுகிறது. வழக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை அனைத்து மட்டத்தில் உள்ள அதிகாரிகளும் பராமரிக்க வேண்டும்.

பொருளாதார மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த தனியாக ஒரு தொழில்நுட்ப பிரிவை தொடங்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கடல்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகவே படகுகளை கொள்முதல் செய்ய வேண்டும். சிறைத்துறை, தீயணைப்பு துறை, சி.ஐ.டி., உளவு பிரிவுகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தலை கட்டுக்குள் வந்துள்ளோம்.

சமரசத்திற்கு இடமில்லை

கர்நாடகத்தில் இந்த அளவுக்கு போதைப்பொருள் முன்பு எப்போதும் கண்டுபிடிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை. குற்றங்களை கட்டுப்படுத்தினால் தான் சட்டம்-ஒழுங்கை சரியாக பராமரிக்க முடியும். போலீஸ் துறையில் சீர்திருத்தத்திற்கு அரசு முழு உதவி செய்யும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேசுகையில், "தேசத்துரோக நடவடிக்கைகளை தடுப்பது, மாவட்ட அளவில் குற்ற தடுப்பு கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்" என்றார்.

Next Story