கொரோனா தடுப்பூசி போட்ட வாலிபர் திடீர் சாவு
அரிசிகெரே தாலுகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் திடீரென மரணம் அடைந்தார்.
ஹாசன்: அரிசிகெரே தாலுகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் திடீரென மரணம் அடைந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டவர் மரணம்
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா பானாவராவை அடுத்த போரனகொப்பலு கிராமத்தில் வசித்தவர் வசந்த்குமார்(வயது 35). இவர் கடந்த 4-ந் தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்ற அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை உறவினர்கள் முதலுதவிக்காக அரிசிகெரே ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வசந்த்குமார் ஹாசன் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி வசந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சாவுக்கான காரணம் தெரியவரும்
கொரோனா தடுப்பூசி போட்ட காரணத்தால் தான் அவர் இறந்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் வசந்த்குமாரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து வசந்த்குமாரின் மரணம் பற்றி ஹாசன் மாவட்ட குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசன் மாவட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேருக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வசந்த்குமார் மட்டும், தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார் என்பதை ஏற்க முடியாது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் சாவுக்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story