‘டிரோன்’ மூலம் காட்டுயானைகளை கண்காணிக்கும் வனத்துறையினர்
தேவாலா பகுதியில் மீண்டும் நுழையாமல் தடுக்க ‘டிரோன்’ மூலம் காட்டுயானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்
தேவாலா பகுதியில் மீண்டும் நுழையாமல் தடுக்க ‘டிரோன்’ மூலம் காட்டுயானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா, நாடுகாணி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 3 காட்டுயானைகள் முகாமிட்டு வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உடனே வனத்துறையினர் முதுமலையில் இருந்து 4 கும்கியானைகளை வரவழைத்து, காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டுயானைகள் ஒவ்வொரு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றது. அதனை வனத்துறையினரும் பின்தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தனர்.
மீண்டும் நுழையாமல் தடுக்க...
பின்னர் தமிழக-கேரள எல்லையான குண்டம்புழா ஆற்றங்கரைக்கு காட்டுயானைகள் விரட்டியடிக்கப்பட்டது. தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், அதை கடந்து காட்டுயானைகளால் கேரள வனப்பகுதிக்கு செல்ல முடியவில்லை.
இதனால் அவை மீண்டும் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். எனினும் அங்குள்ள அடர்ந்த வனத்துக்குள் காட்டுயானைகள் செல்லும்போது தொடர்ந்து கண்காணிக்க முடியவில்லை. இதனால் ‘டிரோன்’ உதவியுடன் கண்காணிப்பு பணி நடக்கிறது.
வனப்பகுதியில் ஆய்வு
அதன்படி நேற்று குண்டம்புழா ஆற்றங்கரையில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகளை வனத்துறையினரால் காண முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் ‘டிரோன்’ பறக்கவிட்டு வனப்பகுதியில் எந்த இடத்தில் காட்டுயானைகள் நிற்கிறது என்று ஆய்வு செய்தனர்.
அப்போது பாண்டியாறு பகுதியில் அந்த 3 காட்டுயானைகளும் முகாமிட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஊருக்குள் நுழையாமல் இருக்க காட்டுயானைகளை கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story