விதிமுறைகளை மீறி கட்டுமான பணி மேற்கொண்டால் கிரிமினல் நடவடிக்கை
குன்னூரில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, விதிமுறைகளை மீறி கட்டுமான பணி மேற்கொண்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
குன்னூர்
குன்னூரில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, விதிமுறைகளை மீறி கட்டுமான பணி மேற்கொண்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மண்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி, நீர்நிலைகள் உள்ள பகுதியில் கட்டிடம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொக்லைன் எந்திரம் பயன்படுத்த தடை இருக்கிறது. எனினும் தடைகயை மீறி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் குன்னூர் நகராட்சி அலுவலகம் அருகில் மவுண்ட் ரோட்டில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதை ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கட்டுமான பணிகள் நடந்தது. அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அகற்றும் பணி நடந்தபோது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் தடுப்புச்சுவர் இடிந்ததால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கி வருகின்றன. இது தொடர்பாக அந்த நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டாமல் தவிர்க்க 3 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
அங்கு நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மணல் மூட்டைகள் அடுக்கும் பணியை 15 நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தினார். மேலும் விதிகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார்.
மாணவர்களுக்கு தொற்று இல்லை
இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது இல்லை. எனினும் அறிகுறி தென்படும் மாணவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. மேலும் அங்கு கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story