நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு


நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2021 2:58 AM IST (Updated: 7 Sept 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையொட்டி நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தலூர்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையொட்டி நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நிபா வைரஸ்

தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் நீலகிரியல் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து நீலகிரிக்கும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது தவிர நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உயிரிழந்தான். இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது.

இதையொட்டி கேரளாவையொட்டி உள்ள நீலகிரியில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சுகாதாரத்துறையினர் பரிசோதனை

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி ஆகியோரின் அறிவுரைப்படி தாளூர், சோலாடி, கோட்டூர், மண்வயல், கக்குண்டி, பூலக்குன்று, நம்பியார்குன்னு, மதுவந்தால், பாட்டவயல், நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார், சுகாதாரத்துறையினர் கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதித்து வருகின்றனர்.

அவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா?, 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்து உள்ளனரா?, நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்று சோதனை செய்கின்றனர்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

இது தவிர கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அங்கு கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மட்டுமின்றி வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகிறது. 

இதற்கிடையில் தாளூர் சோதனைச்சாவடியில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரன் ஆய்வு நடத்தினார். பின்னர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் மற்றும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை நீலகிரிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று ஊழியர்களை அறிவுறுத்தினார்.


Next Story