தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 76 பேர் கைது


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 76 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sep 2021 9:28 PM GMT (Updated: 6 Sep 2021 9:28 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை வசதி
நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை  மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அந்த பகுதி பொதுமக்கள் சாலை வசதி செய்து கொடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். தண்டுமாரியம்மன் கோவில் அருகில் இருந்து கோம்பை வரை உள்ள வனப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் மீண்டும் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் மலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை வசதி வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் இங்கிருந்து கலைய மாட்டோம் என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே சாலை வசதி கேட்டு அந்த ஊர் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 40 பெண்கள் உள்பட 76 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story