விநாயகர் சதுர்த்தி அன்று பா.ஜனதா கட்சியினர் வீடுகள் முன்பு சிலை வைத்து வணங்க வேண்டும் தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
விநாயகர் சதுர்த்தி அன்று பா.ஜனதா கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு விநாயகர் சிலை வைத்து வணங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தர்மபுரி:
விநாயகர் சதுர்த்தி அன்று பா.ஜனதா கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு விநாயகர் சிலை வைத்து வணங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநில செயலாளர் ஏ.பாஸ்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராஜ், கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் வர்மா வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் மூலம் விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயித்தல் உள்பட கிடைக்கும் நன்மைகள் குறித்து மண்டல அளவில் கிராமம், கிராமமாக சென்று விவசாயிகளிடம் விளக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. விநாயகர் சதுர்த்தி அன்று பா.ஜனதாவினர் மற்றும் ஆன்மீகவாதிகள் தங்கள் வீடுகளின் முன்பு விநாயகர் சிலைகள் வைத்து வணங்க வேண்டும்.
வாழ்த்து மடல்
கிருஸ்துமஸ் மற்றும் ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூற மாட்டார். எனவே அவருக்கு பா.ஜனதா கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்து 10 லட்சம் வாழ்த்து மடல் அட்டைகளை அனுப்பி நமது உணர்வை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் பொது சொத்துக்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடு இல்லாமல் உள்ள பல பிரிவுகளை சீர்படுத்துவதற்காக தனியாரிடம் குத்தகைக்கு வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ 6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும்.
இந்த நிலையில் பொதுத்துறை சொத்துக்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதாக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புவது தவறான பிரசாரம். இதுதொடர்பாக மக்களிடம் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் இமானுவேல், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஐஸ்வர்யம் முருகன், மாவட்ட செயலாளர் சவுமி நாராயணன் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story