குளித்துவிட்டு துண்டை கம்பியில் உலர வைத்த போது மின்சாரம் தாக்கி தம்பதி பலி பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகன் படுகாயம்


குளித்துவிட்டு துண்டை கம்பியில் உலர வைத்த போது மின்சாரம் தாக்கி தம்பதி பலி பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகன் படுகாயம்
x
தினத்தந்தி 7 Sept 2021 3:09 AM IST (Updated: 7 Sept 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே குளித்து விட்டு துண்டை கம்பியில் உலர வைத்த போது மின்சாரம் தாக்கி தம்பதி பலியானார்கள். பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகன் படுகாயம் அடைந்தார்.

ஓமலூர்
மின்சாரம் தாக்கியது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சின்ன அடைக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு அன்பழகன் (42) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ராமலிங்கம் நேற்று இரவு 8 மணி அளவில் குளித்துவிட்டு துண்டை வீட்டின் முன்பு இருந்த கம்பியில் காயப்போட வந்தார். அந்த இரும்பு கம்பி செட்டாப் பாக்ஸ் டிஷ் உடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. 
இதை அறியாமல் இரும்பு கம்பியில்  ராமலிங்கம் துணியை காயப்போட்டு உள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி அலறினார். இதைப்பார்த்த அவருடைய மனைவி லட்சுமி தனது கணவரை காப்பாற்ற ஓடிச்சென்று பிடிக்க முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
தம்பதி பலி
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மகன் அன்பழகன் பெற்றோரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனிடையே மின்சாரம் தாக்கியதில் சுருண்டு விழுந்த ராமலிங்கமும், அவருடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் தாக்கி தம்பதி பலியானது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பலியான தம்பதியின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தம்பதி பலியான சம்பவம் ஓமலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story