வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சேலத்தில் பரபரப்பு


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Sept 2021 3:09 AM IST (Updated: 7 Sept 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தலைமை ஆசிரியர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சேலம்
தலைமை ஆசிரியர் 
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள மோரூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் (வயது 45). இவர் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை உண்டு உறைவிடப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த ஆண்டு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேஷ்வரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது வெங்கடேஷ்வரன் சேலம் நெடுஞ்சாலை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 6.45 மணிக்கு அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் போலீசார் சென்றனர். இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.
8 மணி நேரம் நடந்தது
மேலும் வீட்டில் இருந்த வெங்கடேஷ்வரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காலையில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடந்தது. அதாவது சுமார் 8 மணி நேரம் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வெங்கடேஷ்வரன் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது புகார் வந்துள்ளது’ என்றனர்.
பரபரப்பு
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்வரன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வெங்கடேஷ்வரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story