விபத்தில் ஜவுளி வியாபாரியின் கை துண்டானது: ரூ.21 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி சேலம் புதிய பஸ்நிலையத்தில் பரபரப்பு


விபத்தில் ஜவுளி வியாபாரியின் கை துண்டானது: ரூ.21 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி சேலம் புதிய பஸ்நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Sep 2021 9:40 PM GMT (Updated: 6 Sep 2021 9:40 PM GMT)

சேலத்தில் விபத்தில் ஜவுளி வியாபாரியின் கை துண்டான வழக்கில் ரூ.21 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

சேலம்,
நஷ்டஈடு வழங்க உத்தரவு
மேட்டூர் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45). ஜவுளி வியாபாரியான இவர், கடந்த 27.4.2015 அன்று தொழில் சம்பந்தமாக சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றார்.
அப்போது, மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொளசம்பட்டிக்கு சென்ற டவுன் பஸ், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மகேந்திரன் வலது கையில் பஸ்சின் சக்கரம் ஏறியதால் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரது கை துண்டானது. இதையடுத்து மகேந்திரன் தரப்பில் நஷ்டஈடு கேட்டு சேலம் 2-வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் தரப்பில் பாதிக்கப்பட்ட மகேந்திரனுக்கு நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் அதே கோர்ட்டில் மகேந்திரன் மேல்முறையீடு செய்தார்.
அரசு பஸ் ஜப்தி
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பழனி, விபத்தில் படுகாயம் அடைந்த மகேந்திரனுக்கு வட்டி, அசலும் சேர்த்து ரூ.21 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜவுளி வியாபாரி மகேந்திரன், கோர்ட்டு அமீனா கார்த்திக், வக்கீல் ரமேஷ் சங்கர் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு சேலத்தில் இருந்து சிதம்பரத்திற்கு செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வந்து நஷ்ட ஈடு தொகையை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அதிகாரிகள் சேலம் 2-வது கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மகேந்திரனுக்கு ரூ.21  லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். அதன்பேரில் ஜப்தி செய்யப்பட்ட பஸ் விடுவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story