சேலம் மாவட்டத்தில் 4-வது நாளாக கனமழை; நிரம்பும் நீர்நிலைகள் கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்க தடை


சேலம் மாவட்டத்தில் 4-வது நாளாக கனமழை; நிரம்பும் நீர்நிலைகள் கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்க தடை
x
தினத்தந்தி 7 Sept 2021 3:10 AM IST (Updated: 7 Sept 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 4-வது நாளாக கனமழை நீடித்ததால் நீர்நிலைகள் நிரம்பிய வண்ணம் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னங்குறிச்சி புதுஏரி நிரம்பிய நிலையில், அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம், 
4-வது நாளாக மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சேலம், ஓமலூர், ஆத்தூர் உள்பட பல இடங்களில் ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரை பொறுத்தவரையில் நேற்று 4-வது நாளாக கனமழை பெய்தது. பிற்பகல் 3 மணியளவில் திடீரென இடியுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, பச்சப்பட்டி, நாராயணன் நகர், களரம்பட்டி, பெரமனூர், அஸ்தம்பட்டி, குகை, சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நேற்றும் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ஏற்காடு
இதேபோல், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை பெய்தது. ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் 4-வது நாளான நேற்று பிற்பகல் 3 மணியளவில் மிதமான மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்சென்றதை காண முடிந்தது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த சுற்றுலாபயணிகள் வண்டியை இயக்க முடியாமல் மழைக்கு ஒதுங்கி நின்றனர். இதேபோல் பள்ளி மாணவர்கள் மாலையில் பெய்த மழை காரணமாக வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நேற்று நீடித்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுகிறது. 
புதுஏரியில் குளிக்க தடை
ஏற்காடு அடிவாரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் கன்னங்குறிச்சியில் உள்ள புதுஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. தற்போது ஏரி நிரம்பி உபரி நீர் அங்குள்ள ஓடையில் வெளியேறுகிறது. இதனால் புதுஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி ஊழியர், கன்னங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சென்று தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர, வருவாய்த்துறை அதிகாரிகள் புது ஏரிக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
ஓமலூர்
ஓமலூர், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் நேற்று மதியமும் பலத்த மழை பெய்தது.
அதே நேரத்தில் ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஓமலூர் பகுதிக்கு பெரும் நீர் ஆதாரமாக இருக்கும் சேர்வராயன் மலையில் இருந்து வரும் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
இதில் கிழக்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் காமலாபுரம் ஏரி நிரம்பி வருகிறது. இதேபோல் மேற்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பி கோட்டேரிக்கு உபரிநீர் வந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் மேற்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் காடையாம்பட்டி கோட்டேரி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த ஏரி பார்ப்பதற்கு கடல்போல் பரந்து விரிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
கிழக்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் காமலாபுரம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன் விவசாய பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழையளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- 
சேலம்-54.4, காடையாம்பட்டி-34, சங்ககிரி-27, ஓமலூர்-26, எடப்பாடி-17, ஏற்காடு-15.8, தம்மம்பட்டி மற்றும் கரியகோவில்-10, மேட்டூர்- 8.6, ஆனைமடுவு-8, பெத்தநாயக்கன்பாளையம்-7, கெங்கவல்லி-3, ஆத்தூர்-2.4.


Related Tags :
Next Story