விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை


விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை
x
தினத்தந்தி 7 Sep 2021 4:54 AM GMT (Updated: 7 Sep 2021 4:54 AM GMT)

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது வரக்கூடிய பண்டிகை காலங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வருகிற 15-ந்தேதி வரை தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட காலத்தில் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள், பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடலாம்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படும். இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது.

நடவடிக்கை

இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறிநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி காஞ்சீபுரம் மாவட்டத்தை கொரோனா நோய்த்தொற்று இல்லா மாவட்டமாக மாற்ற போதிய ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

உத்திரமேரூர்

சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உத்திரமேரூர் காவல் துறையின் சார்பாக தனியார் கல்யாண மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கலந்துகொண்டு சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்.

அதில், தனிநபர்கள் அவர் அவர்கள் வீட்டில் தனித்தனியே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும். எந்த ஒரு அமைப்பின் மூலமாகவும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உறியடி திருவிழா போன்றவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பொருட்கள் வாங்கி வர கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்து அமைப்பினர், பா.ஜ.க. தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story