முதலை பண்ணையை பார்வையிட அனுமதி
உடுமலையை அடுத்த அமராவதி அருகே வனச்சரக பகுதியில் அமைந்துள்ள முதலைப்பண்ணையை பார்வையிடுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்
தளி
உடுமலையை அடுத்த அமராவதி அருகே வனச்சரக பகுதியில் அமைந்துள்ள முதலைப்பண்ணையை பார்வையிடுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
முதலை பண்ணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன்பு பூங்கா, ராக் கார்டன் அணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முதலைப்பண்ணை உள்ளது. இங்குள்ள பண்ணையில் பெண் முதலைகள் உள்ளிட்ட 103 நன்னீர் முதலைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவற்றை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர். இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக முதலை பண்ணைக்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் புலி, ஒட்டகச்சிவிங்கி சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனவிலங்குகளின் மார்பளவு சிலையுடன் கூடிய மர இருக்கைகளும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பலவிதமான பூச்செடிகளும் பறவைகளின் உருவங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முதலைப்பண்ணை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அனுமதி
அந்த தடை தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் உற்சாகத்தோடு முதலைப் பண்ணைக்கு வந்து முதலைகளை பார்வையிட்டும், ஆங்காங்கே குடும்பத்தோடு அமர்ந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.
அதோடு குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் மகிழ்ச்சியாக விளையாடி வருகின்றனர். ஆனால் மறுஉத்தரவு வரும் வரையிலும் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளிட்ட நாட்களில் அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story