மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்
உடுமலை பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்களை வழங்கி உள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்களை வழங்கி உள்ளனர்.
சாகுபடி
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோள விவசாயிகளுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ள படைப்புழுக்களால் ஏற்படும் சேதத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது
படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது. தாய் அந்துப்பூச்சி இலைகளின் அடியில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். இவ்வாறு ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தன் வாழ்நாளில் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதம் உண்டாக்கும். அடுத்தடுத்த நிலைகளில் குருத்து முதல் கதிர் வரை சேதம் உண்டாக்கி மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.
விதைநேர்த்தி
விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். இது மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். தப்பிப்பிழைத்த கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் முட்டையிட முடியாத அளவுக்கு செயலற்றதாகவே இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் விதைப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும். இந்த விதைகளில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்எஸ் மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்எஸ் என்ற கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
இனக்கவர்ச்சிப்பொறி
வரப்புப்பயிராக 3 வரிசை தட்டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு அல்லது சோளம் விதைக்க வேண்டும். இவ்வாறு பூக்கும் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் படைப்புழுக்களின் இயற்கை எதிரிகளான புள்ளி வண்டுகள், தரை வண்டுகள் மற்றும் பூ பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
எனவே விதைப்பு சமயத்திலேயே ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். இதன்மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதால் 30 முதல் 40 நாட்களில் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதன்பிறகும் பாதிப்பு அதிக இருந்தால் 100 செடிகளுக்கு 10 செடிகளுக்கு மேல் வேளாண்மைத்துறையினரின் ஆலோசனை பெற்று உரிய மருந்துகளைத்தெளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரைப் படத்தில் காணலாம்.
---
படைப்புழு
----
Related Tags :
Next Story