தேனி ரெயில் நிலையத்தில் மாவட்டத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் சிற்பச்சுவர் ரசித்து மகிழும் பொதுமக்கள்
தேனி ரெயில் நிலையத்தில் மாவட்டத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் சிற்பச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை கவரும் வகையில் உள்ளது.
தேனி:
மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் காலத்தில் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்த இந்த பாதையை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிட்டு கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தண்டவாளங்கள் அகற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து தேனி வரை ரெயில் பாதை அமைக்கும் பணி முழுமையடைந்துள்ளது. இதையடுத்து இந்த ரெயில்பாதையில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தேனியில் இருந்து போடி வரை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அத்துடன், தேனியில் இருந்த பழைய ரெயில் நிலையம் அகற்றப்பட்டு புதிதாக ரெயில் நிலையம் கட்டுமான பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சிற்பச்சுவர்
தேனி ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயில் நிலையத்தில் அலுவலக அறைகள், ரெயில்வே போலீஸ் நிலையம், பயணச்சீட்டு அலுவலகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பயணச்சீட்டு அலுவலகம் முன்பு தேனி மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணச்சீட்டு அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. புடைப்பு சிற்பங்கள் போன்ற வடிவில் ரசனையுடன் இந்த சிற்பச்சுவர் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அது அமைந்துள்ளது.
நேர்த்தியான வடிவமைப்பு
இந்த சிற்பச்சுவரில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, சுருளி அருவி, சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் ஆகியவை நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற கரகாட்டத்தை குறிக்கும் வகையில் கரகாட்டம் ஆடும் பெண்ணின் உருவம், அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை நினைவுபடுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் பிடிக்கும் காட்சி, ஹைவேவிஸ் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளி, ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி உருவம் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், மாவட்டத்தில் விளையும் முக்கிய விளை பொருட்களான திராட்சை, மாம்பழம், காபி போன்றவையும், யானை, புலி போன்ற வன விலங்குகளும் இந்த சிற்பச்சுவரில் இடம்பெற்றுள்ளது. இந்த சிற்பச்சுவரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பதோடு மாவட்டத்தின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளதை எண்ணி மகிழ்கின்றனர்.
Related Tags :
Next Story