தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு சிறப்பு மதிப்பீட்டு முகாம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
முகாம்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத்தலைவருமான கனிமொழி முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.
மகிழ்ச்சி அளிக்கிறது
அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதன்படி உபகரணங்கள் பெறுவதற்கான முகாம்கள் நடத்த வேண்டும். அதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பலமுறை முயற்சி செய்தோம். ஆனால், ஆட்சி வேறு சிலர் கையில் இருந்ததால் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை நடத்த முடியாமல் இருந்தது. தற்போது இந்த முகாமை அனைத்து துறை அலுவலர்கள் ஒத்துழைப்புடன் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர். எனவே, முகாமில் கலந்துகொண்டவர்கள், தகவல் கிடைக்க பெறாத உங்களை போன்ற மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அரசின் நலத்திட்ட பலன்களை பெற்று பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மனு
தூத்துக்குடி அருகே உள்ள எஸ்.கைலாசபுரம் சவரிமங்களம், புதுர், உமரிகோட்டை, வரதராஜபுரம், செட்டியூரணி கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சிமெண்டு தொழிற்சாலை
தூத்துக்குடி அருகே உள்ள எஸ்.கைலாசபும் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிக்கு மிகவும் அருகில் தனியார் நிறுவனம் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சிமெண்டு தொழிற்சாலை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் கைலாசபுரம் கிராமத்தில் நடந்த போது, ஒட்டு மொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலை அமைய உள்ள இடத்தின் அருகே பள்ளிக்கூடம் உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளது. ஆலை அமைந்தால் 230 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தொழிற்சாலைக்கான தண்ணீர் தேவை அதிகம் என்பதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் இதனால் பல கிராமங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
அபாயம்
சிமெண்டு ஆலையினால் ஏற்படும் அதிகப்படியான மாசு காற்றில் கலந்து புல் மற்றும் செடிகளில் படிந்து கால்நடை மேய்ச்சல் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படும் மேலும் நுரையிரல் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் டைஆக்சைடு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும்.
ஆகையால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்து அந்த ஆலைக்கு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story