வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
திண்டுக்கல்:
கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிக நடமாட்டம் பகுதியில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.
அதன்படி கொடைக்கானல், பழனியில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் தினமும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
வீடு, வீடாக சென்று...
எனினும் முகாமுக்கு நேரில் வர முடியாதவர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதுபோன்ற நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் முதல்கட்டமாக மரியநாதபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதில் நகர்நல அலுவலர் இந்திரா மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் செவிலிய பயிற்சி மாணவிகள் என 150 பேர் ஈடுபட்டனர்.
அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதார பணியாளர்கள் சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கேட்டு அறிந்தனர். அதில் தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் மாநகராட்சி முழுவதும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைத்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story