மேலும் ஒரு ஆசிரியர், மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு


மேலும் ஒரு ஆசிரியர், மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2021 10:14 PM IST (Updated: 7 Sept 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஒரு ஆசிரியர், மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஒரு ஆசிரியர், மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை 

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. 

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 5 கல்வி மாவட்டங்களில் சுமார் 544 பள்ளிகளில் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுழற்சி முறைகளில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தி உள்ளார். 

அதைத்தொடர்ந்து திறக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

3 நாள் பள்ளி மூட உத்தரவு

 இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவர் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் பள்ளியை சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்கள் கொரோனா தொற்று உறுதியானது. மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து அப்பள்ளிக்கு 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

4 ஆசிரியர்கள், மாணவி

தொடர்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையில் போளூர் ஒன்றியத்தில் உள்ள அனந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீக்களூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. 

இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, தற்போது 80 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். 

அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

அந்த சமயத்தில் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாணவர்களை அழைத்து செல்லும் போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டும். 

ஆய்வு மேற்கொள்ளும் போது பள்ளி வாகனங்களில் சமூக இடைவெளி பின்பற்றபடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளிளை மூட உத்தரவிடப்படும் என்றார்.

Next Story