செஞ்சியை போல் கடலூரிலும் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுவனுக்கு சூடு வைத்த தாய் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு
கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுவனுக்கு சூடு வைத்த தாய், அவனை நடுரோட்டில் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சியை போல் கடலூரிலும் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
செஞ்சி சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது சிறுவனை இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய தாய், அவரது கள்ளக்காதலன் ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் அடங்குவதற்குள் கடலூரிலும் இதே போல் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கள்ளக்காதல்
கடலூர் சூரப்பன்நாயக்கன்சாவடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது 2-வது மனைவி சாந்திதேவி (வயது 35).
இவர்களுக்கு பாலசந்தர் (12) என்கிற மகன் உள்ளான். இவன் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா காரணமாக தற்போது பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி படித்து வருகிறான்.
இந்நிலையில் சாந்திதேவிக்கும், சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மகனும், சித்த வைத்தியருமான சுகையில் அகமது (40) என்பவருக்கும் கடலூரில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுகையில் அகமது அடிக்கடி சாந்திதேவியை பார்க்க வந்து சென்றுள்ளார்.
இடையூறு
இவர்களின் கள்ளக்காதல் பற்றி சிறுவன் பாலசந்தர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட சாந்திதேவி தான் பெற்ற மகன் என்றும் பாராமல் பாலசந்தரை அடிக்கடி சூடு வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்து போன பாலசந்தர் இது பற்றி பேசுவதை நிறுத்தி விட்டான். இந்நிலையில் சாந்திதேவியை பார்க்க சுகையில் அகமது நேற்று அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்த பாலசந்தர் தனது தாயிடம் அவர் ஏன்? அடிக்கடி நம் வீட்டுக்கு வருகிறார் என்று கேட்டு, அவர்களின் கள்ளக்காதலுக்கும் இடையூறாக இருந்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த சாந்திதேவி, கள்ளக்காதலன் சுகையில் அகமதுவுடன் சேர்ந்து கொண்டு, தனது மகன் என்றும் பாராமல் இரும்பு குழாயை தீயில் பழுக்க வைத்து, சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த சிறுவன் தெருவுக்கு ஓடியுள்ளான். அப்போதும் அவனை விடாமல் துரத்தி, துரத்தி சாந்திதேவி கொடூரமாக தாக்கி மிரட்டியுள்ளார்.
கைது
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுவன் பாலசந்தர் நடந்த விவரத்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினான்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக அவனது உடலில் சாந்திதேவி பல இடங்களில் சூடு வைத்த காயங்கள் இருந்தன. இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாந்திதேவி, அவரது கள்ளக்காதலன் சுகையில் அகமது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சிறுவனை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பரபரப்பு
இருப்பினும் பெற்ற மகன் என்றும் பாராமல் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அவனுக்கு கல் நெஞ்சம் படைத்த கொடூர தாய் சூடு வைத்ததோடு, நடுரோட்டில் தாக்கிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story