கோவையில் 5 பிரிவுகளாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து
கோவையில் 5 பிரிவுகளாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து
கோவை
சென்னையை போல் கோவை நகரில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.6,300 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி கோவை திருச்சி ரோடு, அவினாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மாநகராட்சி சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வழியாக மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்ட தயாரிப்புக்கான ஆய்வு பணிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை நகரிலும், நகரை சுற்றிலும் 144 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து இருக்கும். இதற்காக 5 பிரிவுகளாக பணிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட பிரிவில் உக்கடத்தில் இருந்து கணியூர்வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2-வது பிரிவில் உக்கடத்தில் இருந்து காரமடை அருகே உள்ள பிளிச்சிவரை மேட்டுப்பாளையம் சாலை வழியாக 24 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 3-வது பிரிவில் தடாகம் ரோட்டில் இருந்து காரணம்பேட்டைவரை திருச்சி சாலை வழியாக 42 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 4-வது பிரிவாக காருண்யா நகர் முதல் சத்திரோடு கணேசபுரம் வழியாக 44 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 5-வது பிரிவாக உக்கடத்தில் இருந்து வெள்ளலூர் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சென்னையை போல் சுரங்கம் அமைத்தும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் செயற்கைகோள் மூலம் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆய்வுப்பணிகள் முடிந்து திட்ட அறிக்கைக்காக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரெயில் திட்ட முதற்கட்ட ஆய்வில் 5 முக்கிய சாலை வழியாக ரெயில்பாதை செல்கிறது. தற்போது மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு, உக்கடம், அவினாசி ரோடு பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த மேம்பால பணிகள் முடிந்தாலே கோவை நகரில் 15 ஆண்டுக்கு போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும். ஆனால் மேம்பாலம் உள்ள பகுதிகளில் மெட்ரோ ரெயில் பாதைகள் குறுக்கிடும்போது மேம்பாலத்துக்காக தற்போது செலவிட்ட தொகை அனைத்தும் விரையம் ஆகும்.
எனவே மெட்ரோ ரெயில் திட்ட வழிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அல்லது வழக்கமான ரெயில்பாதை செல்லும் வழியில் போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் வழியாக வட்ட ரெயில்பாதை அமைத்து சென்னையை போல் நகர ரெயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கலாம் என்றும் பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story