திருவண்ணாமலையில் 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது


திருவண்ணாமலையில் 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2021 10:53 PM IST (Updated: 7 Sept 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

ரேஷன் அரிசி பதுக்கி கடத்தல்

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யாநந்தன் மற்றும் போலீசார் மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வள்ளிவாகை புதூர் கிராமத்தில் சோதனை செய்தனர். 

அப்போது அப்பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது குடோனில் திருவண்ணாமலை தேனிமலை பால் பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 46) என்பவர் 45 கிலோ எடையுள்ள 330 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதும், அதனை கடத்துவதற்காக லாரியில் ஏற்றி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குடோன் உரிமையாளர் சந்திரன், ரேஷன் அரிசியை பதுக்கிய ஆறுமுகம் மற்றும் லாரி டிரைவர் கீழ்பென்னாத்தூர் அண்ணடம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமு (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 14 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

மேலும் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது அண்ணன் தேனிமலையை சேர்ந்த ஏழுமலை (57) என்பவரும் அவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 25 கிலோ எடை கொண்ட 170 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அதனை சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையையும் போலீசார் கைது 4 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 19 டன் ரேஷன் அரிசி, ஒரு டிப்பர் லாரி மற்றும் சரக்கு வேனை தனிப்படை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story