போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு
வாணியம்பாடி அருகே போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி சான்றிதழ்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவரும் மகாலட்சுமி (வயது 41) என்பவர் தனது பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து, பணியில் சேர்ந்துள்ளார். இவரது சான்றிதழ்கள் உண்மை தன்மை அறிய சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்த போது அது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது,
இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் ஞானகிரிஜா வாணியம்பாடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது 5 பிரிவுகளில் அதாவது பிரிவுகளில்( 465, 466, 468, 471, 420) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஆலங்காயத்தை அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சியில் உள்ள நன்னேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஒளிவேந்தன் (51) என்பவர், பிளஸ்-2 கல்வி சான்றிதழில் 3 பாடப்பிரிவுகளில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்துள்ளார், இதுகுறித்தும் சென்னை கல்வித்துறை இயக்கனரகத்திலிருந்து வரப்பட்ட தகவலின் அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர் ஞானகிரிஜா, ஆலங்காயம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ஒளிவேந்தன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஒரு ஆசிரியர்
மேலும், இதே ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து தற்போது திருப்பத்தூர் ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒரு ஆசிரியர் மீதும் திருப்பத்தூர் தாலுகா போலீசில் கல்வித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story