புஷ்பவனம் மீனவரின் படகு மீது இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியது
மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது புஷ்பவனம் மீனவரின் படகு மீது இந்திய கடலோர காவல் படை கப்பல் மோதியதில் கடலில் ஒரு மீனவர் தவறி விழுந்தார். உடனடியாக அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
வேதாரண்யம்:
மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது புஷ்பவனம் மீனவரின் படகு மீது இந்திய கடலோர காவல் படை கப்பல் மோதியதில் கடலில் ஒரு மீனவர் தவறி விழுந்தார். உடனடியாக அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
படகு மீது கப்பல் மோதியது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த தவமணி(வயது 45) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார்(42), மகாலிங்கம்(60), செல்லமணி(30) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் புஷ்பவனம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் அன்று இரவு 11.30 மணியளவில் புஷ்பவனத்திற்கு கிழக்கே 7 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று மீனவர் தவமணியின் பைபர் படகு மீது மோதியது.
மீனவர் கடலில் தவறி விழுந்தார்
கப்பல் மோதிய வேகத்தில் படகில் இருந்து செல்லமணி தூக்கி வீசப்பட்டு கடலுக்குள் விழுந்தார். மேலும் மற்றொரு மீனவரான மகாலிங்கத்திற்கு உள்காயம் ஏற்பட்டது.
மீனவர் செல்லமணி கடலுக்குள் விழுந்தது படகில் இருந்த மற்ற மீனவர்களுக்கு தெரியவில்லை. இதனால் மீனவர் செல்லமணி 2 மணி நேரமாக கடலில் நீந்திக்கொண்டிருந்தார்.
உயிருடன் மீட்டனர்
அப்போது அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பார்த்து அவரை மீட்டு நேற்று காலை கரைக்கு கொண்டு வந்தனர். அதேபோல கப்பல் மோதிய படகில் இருந்த மீனவர்களும் கரை திரும்பினர். பின்னர் செல்லமணியும், மகாலிங்கமும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கப்பல் மோதியதில் படகின் பின்புறத்தில் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் வந்த கடலோர காவல் படையினருக்கு தாங்கள் டார்ச் லைட் அடித்து சைகை செய்தும் கவனக்குறைவாக வந்து தங்களது படகின் மீது இந்திய கடலோர காவல் படையினர் மோதியதாக புஷ்பவனம் மீனவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story