14 டன் ரேஷன் நெல் மூடைகள் பறிமுதல்
ராஜபாளையத்தில் 14 டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தை சேர்ந்த சித்தையா என்பவர் தென்காசி சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே நவீன அரிசி ஆலை நடத்தி வருகிறார். விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கும் நெல் மூடைகளை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் இருந்து பெற்று, அரிசியாக்கி மீண்டும் அரசுக்கே வழங்கும் ஒப்பந்தம் மூலம் இந்த ஆலையை நடத்தி வருகிறார்.
அரசு ஒப்பந்தப்படி தனியாரிடம் இருந்து நெல் மூடைகளை வாங்கி அரைப்பது குற்றம் என்ற நிலையில், இவரது ஆலையில் இருந்து தனியாருக்கு அரிசி மூடைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட வழங்கல் பிரிவு தனி வட்டாட்சியர் சுந்தர பாண்டியன் தலைமையில், வட்ட வழங்கல் வட்டாட்சியர்கள் விக்னேஸ்வரன், கோதண்டராமன், ராமநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவில் ஆலையில் இருந்து வெளியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது, அதில் 14 டன் நெல் மூடைகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து பெறப்பட்ட நெல் மூடைகளை வேறு சாக்குகளில் மாற்றி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. எனவே கடத்தப்பட்ட ரூ.1.75 லட்சம் மதிப்பிலான 14 டன் நெல் மூடைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஆலை உரிமையாளரிடம் மேல் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரசு அளிக்கும் தரமான நெல் மூடைகளை தனியார் அரிசி ஆலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும், நியாய விலைக் கடைகளில் இருந்து கள்ள சந்தைக்கு வரும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீண்டும் அரசு நுகர் பொருள் கழகத்திற்கே தொடர்ந்து அனுப்பி வந்ததும் உறுதியானது.
எனவே ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளதாக வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story