விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
நாகர்கோவில் வடசேரியில் விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரியில் விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மர்ம நபர்கள்
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பிரதிஷ்டை செய்வதற்காக நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக தங்கி இருந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு சில மர்ம நபர்கள் அங்கு வந்து சிலைகள் விற்பனை செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பணம் தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் திடீரென இரும்பு கம்பியால் ராஜஸ்தான் மாநிலத்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.
விநாயகர் சிலைகள் சேதம்
மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளையும் சேதப்படுத்தினர். இச்சம்பவத்தில் ஒரு அடி முதல் 2 அடி உயரம் வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே விநாயகர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் காட்டூத் தீ போல மாநகர் முழுவதும் பரவியது.
பரபரப்பு
அதைத்தொடர்ந்து பா.ஜனதா, இந்து முன்னணி மற்றும் பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இல்லை எனில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்து அமைப்பினர் கூறினர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்து அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விரைவில் மர்ம நபர்களை கைது செய்து விடுவோம் எனவே நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராமலால் (வயது 40) என்பவர் வடசேரி போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story