கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் குவியல், குவியலாக தேங்கிக்கிடக்கும் நெல்


கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் குவியல், குவியலாக தேங்கிக்கிடக்கும் நெல்
x
தினத்தந்தி 8 Sept 2021 2:27 AM IST (Updated: 8 Sept 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே உள்ள கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல் குவியல், குவியலாக தேங்கி கிடக்கிறது. எனவே நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்;
தஞ்சை அருகே உள்ள கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல் குவியல், குவியலாக தேங்கி கிடக்கிறது. எனவே நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம்
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.
தஞ்சையை அடுத்த விளார் அருகேயுள்ள கொல்லாங்கரை பகுதியிலும் நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்லாங்கரை அருகே உள்ள கோவிலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கோவிலூர் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள காசாநாடு புதூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
குவியல், குவியலாக
இந்நிலையில், கோவிலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்த நெல்லை கோவிலூர் நெல் கொள்முதல் நிலையம் முன் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவியல், குவியலாக குவித்து வைத்து 8 நாட்களுக்கும் மேலாக காத்துக் கிடக்கின்றனர். 1000-த்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து கொள்முதல் செய்யுமாறு கோவிலூர் கிராம விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் முறையிட்டனர். இந்நிலையத்தைத் திறப்பதாக அலுவலர்கள் 4 நாள்களாகக் கூறி வந்தாலும், இன்னும் திறக்கவில்லை.
நெல் வீணாகிறது
இதனால் இரவு நேரத்தில் மழை வரும்போது, தார்ப்பாய் போட்டு பாதுகாக்கப்பட்டாலும், தரை வழியாக மழை நீர் புகுந்துவிடுகின்றன. இதனால், இதுவரை நான்கைந்து மூட்டைகள் அளவுக்கு நெல் வீணாகிவிட்டது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையம் திறக்கப்படாததால் அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள நெற் பயிர்களையும் அறுவடை செய்ய விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால், மகசூல் இழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்திலும் விவசாயிகள் உள்ளனர். எனவே, இந்நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story