பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.8½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 8 பேர் கைது


பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.8½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 8 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2021 3:03 AM IST (Updated: 8 Sept 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.8½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்
புகையிலை பொருட்கள்
சேலம் அம்மாபேட்டை குமரகிரிபேட்டை பகுதியில் நேற்று அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குமரகிரிபேட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் முகேஷ் (வயது 27), கார்த்திக் (31), சின்னகடை வீதியை சேர்ந்த செவன்ராம் (26), ஜெயராம் (20) சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (29) ஆகியோர் என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
400 கிலோ பறிமுதல்
இதனிடையே அவர்களை பின்தொடர்ந்து அதே வழியில் சந்தேகமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் கொண்டலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (33), சின்னதிருப்பதியை சேர்ந்த சேட்டு (52), மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த குமார் (44) என்பதும், அவர்கள் நஞ்சம்பட்டி பிரிவு ரோட்டில் முகேசிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.8½ லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்கள், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story