ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் படம் உடைப்பு: அ.தி.மு.க. கிளை செயலாளர் கைது தலைவாசல் அருகே பரபரப்பு


ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் படம் உடைப்பு:  அ.தி.மு.க. கிளை செயலாளர் கைது தலைவாசல் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sept 2021 3:03 AM IST (Updated: 8 Sept 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே ரேஷன்கடையில் முதல்-அமைச்சர் உருவப்படத்தை உடைத்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கைது செய்யப்பட்டார்.

தலைவாசல்
முதல்-அமைச்சர் படம் உடைப்பு
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த நத்தக்கரை கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அதே ஊரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் நரேஷ் (வயது 35) என்பவர் வந்தார். அங்கு கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் பட்டுதுறை கிராமத்தை சேர்ந்த ஆலடி ஆதி (35) என்பவரிடம் பணி செய்ய விடாமல் தடுத்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். 
அப்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரேஷன் கடையில் யார் படமும் வைக்கவில்லை. இப்போது மட்டும் எப்படி முதல்-அமைச்சர் படம் வைக்கலாம் எனக்கூறிய நரேஷ், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களை எடுத்து உடைத்துள்ளார்.
இதை அங்கிருந்த அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன், ஜெயராஜ் ஆகியோர் தட்டிக் கேட்டனர். அவர்களுக்கு நரேஷ் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரேஷன் கடை விற்பனையாளர் ஆலடி ஆதி, தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அ.தி.மு.க. கிளை செயலாளர் கைது
இந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. கிளை செயலாளர் நரேஷ் மீது, தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் உடைக்கப்பட்ட புகைப்படங்களுக்கு பதிலாக மு.க.ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் புதிய புகைப்படங்கள் அந்த ரேஷன் கடையில் மீண்டும் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நத்தக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story