தசரா விழாவில் பங்கேற்க 9 யானைகள் வருகிற 13-ந்தேதி, மைசூரு வருகை
தசரா விழாவில் பங்கேற்க 9 யானைகள் வருகிற 13-ந்தேதி மைசூருவுக்கு வர உள்ளன. இந்த முறையும் அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமக்க உள்ளது.
மைசூரு: தசரா விழாவில் பங்கேற்க 9 யானைகள் வருகிற 13-ந்தேதி மைசூருவுக்கு வர உள்ளன. இந்த முறையும் அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமக்க உள்ளது.
மைசூரு தசரா விழா
மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலமும் அரண்மனை வளாகத்தில் மட்டுமே நடந்தது.
இந்த ஆண்டும் கொரோனா பரவல் இருப்பதால், தசரா விழாவை எளிமையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலத்தை அரண்மனை வளாகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
13-ந்தேதி வருகை
மேலும் இந்த ஆண்டு தசரா விழாவில் 9 யானைகள் பங்கேற்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மைசூரு தசராவில் பங்கேற்கும் யானைகள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 9 யானைகளும் வருகிற 13-ந்தேதி மைசூருவுக்கு வர உள்ளதாக வனத்துறை அதிகாரி கரிகாலன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டும் 750 எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு தான் சுமக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதுகுறித்து கூறியதாவது:-
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க 9 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த யானைகள் வருகிற 13-ந்தேதி முகாம்களில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்படுகின்றன. மைசூரு அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு அந்த யானைகள் அழைத்து வரப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து வருகிற 16-ந்தேதி பாரம்பரிய முறைப்படி மைசூரு அரண்மனைக்கு யானைகள் அழைத்து செல்லப்படுகின்றன. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அபிமன்யு யானை தான் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்க உள்ளது.
அரண்மனை வளாகத்தில் பயிற்சி
மைசூரு அரண்மனைக்கு அழைத்து வந்த பிறகு, அரண்மனை வளாகத்திலேயே யானைகளுக்கு நடைபயிற்சி, பீரங்கி குண்டு சத்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். யானைகளுக்கு ஒரு மாதம் வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை, சத்தான உணவு வகைகளும் வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story