விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூருவில், வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க மாநகராட்சி உத்தரவு


விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூருவில், வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க மாநகராட்சி உத்தரவு
x
தினத்தந்தி 8 Sept 2021 3:05 AM IST (Updated: 8 Sept 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க வேண்டும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க வேண்டும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் பொது இடங்களில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட கடந்த 5-ந் தேதி அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கடந்த ஆண்டு பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் அனுமதி அளித்து இருந்தோம். அதே நிலை தான் இந்த ஆண்டும் நீடிக்கும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 

அதிகாரிகள் அனுமதி கட்டாயம்

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் விநாயகர் சிலை வைக்க விரும்புபவர்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து அதற்கான அனுமதி பெற வேண்டும். பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளிலும் பொது இடங்களில் ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க அனுமதி வழங்கப்படும். அதற்கு அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். சிலை வைக்க விரும்புபவர்கள் வருகிற 9-ந் தேதிக்குள்(நாளை) விண்ணப்பிக்க வேண்டும். 

*பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் 4 அடி உயரமும், வீடுகளில் வைக்கப்படும் சிலைகள் 2 அடி உயரத்திலும் இருக்க வேண்டும்.

ஊர்வலத்திற்கு தடை

* அனைத்து கலாசார நிகழ்ச்சிகள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
* ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழாக்குழுவினர் கொரோன நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
* வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுபவர்கள் அந்த சிலையை வீட்டிலேயே கரைக்க வேண்டும்.
* ராட்சத விநாயகர் சிலைகளை கரைக்க பெங்களூருவில் செயற்கை குளங்கள் உருவாக்கப்படும். 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story