மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பத்ராவதியில் நடந்துள்ளது.

சிவமொக்கா: கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பத்ராவதியில் நடந்துள்ளது. 

கடன் தொல்லை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் சுபாஷ் நகரை சேர்ந்தவர் தனசேகர். இவருடைய மனைவி சங்கீதா (வயது 35). இந்த தம்பதியின் மகள் மதுஸ்ரீ (11). தனசேகர், வியாபாரம் செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவருடைய வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும் வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கவில்லை. 

இதனால் தனசேகர், வங்கி மற்றும் தனியாரிடம் ரூ.16 லட்சம் வரை கடன் வாங்கி வியாபாரம் மற்றும் சிறு, சிறு தொழில் செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் தனசேகரால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். 

கொலை-தற்கொலை

இதன்காரணமாக தனசேகர் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா ஆகியோர் மனமுடைந்து காணப்பட்டனர். மேலும் தனசேகர் இல்லாத நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மேலும்  மனமுடைந்த சங்கீதா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். 

அதன்படி நேற்று காலை தனசேகர் வெளியே சென்றார். அப்போது வீட்டில்  தனியாக இருந்த சங்கீதா, தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மகள் மதுஸ்ரீயை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

போலீஸ் விசாரணை

இதற்கிடையே வெளியே சென்றிருந்த தனசேகர், வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மகளும், மனைவியும் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒசமனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் மகளை கொன்று சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஒசமனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story