சங்கரன்கோவிலில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையோர வியாபாரிகள் போராட்டம்
சாலையோர வியாபாரிகள் போராட்டம்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
சங்கரன்கோவிலில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் என்.ஜி.ஓ. காலனி முதல் அரசு மருத்துவமனை வரை மற்றும் திருவேங்கடம் சாலையின் சாலை ஓரங்களிலும் கடைகளை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் எடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பின்போது சாலையோர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
எனவே சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், சாலையோர வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்தும் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குடும்பத்துடன் திரண்டனர்
போராட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரச் செயலர் செல்வகணேஷ், பொருளாளர் பி.ஜி.சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட இணைச் செயலர்கள் எஸ்.லட்சுமி, லெனின்குமார், மாவட்ட துணை தலைவர் ரத்தினவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலர் முத்துப்பாண்டியன், வட்டார செயலர் அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முற்றுகை போராட்டத்தில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சாந்தியிடம் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருநீலகண்ட ஊரணி அருகில் இருபக்கமும் அனைத்து வியாபாரிகளும் கடைகளை அமைத்துக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நகரின் பல பகுதிகளிலும் உள்ள சாலையோர வியாபாரிகள் ஒரே இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்ய தங்களால் முடியாது எனவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை.
ஆனாலும் 3 மணிநேரம் கொளுத்தும் வெயிலில் சாலையோர வியாபாரிகள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து தங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறி சாலையோர வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
....................
Related Tags :
Next Story