விலை சரிவால் விவசாயிகள் கண்ணீர்


விலை சரிவால் விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 8 Sept 2021 4:03 PM IST (Updated: 8 Sept 2021 4:03 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் பகுதியில் வெங்காய விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலை சரிவால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பொங்கலூர்
பொங்கலூர் பகுதியில் வெங்காய விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலை சரிவால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
வெங்காயம் சாகுபடி
பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காரணம் இங்கு நிலவிவரும் சின்ன வெங்காயத்திற்கான சீதோஷண நிலையும், இந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் சின்ன வெங்காய ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆரம்ப காலங்களில் நாட்டு ரக சின்ன வெங்காயம் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் உயர்ரக சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர். 
அதனை தொடர்ந்து ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொங்கலூர் பகுதி சின்னவெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்று விளங்கி வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான நாற்றுப் பண்ணைகள் உள்ளதால் சின்ன வெங்காய சாகுபடிக்கு மிகுந்த ஒத்துழைப்பு ஏற்பட்டும் வருகிறது. சுமார் 70 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 6 முதல் 8 டன் அளவிற்கு மகசூல் கிடைக்கும். 
விளைச்சல் பாதிப்பு
ஆனால் இந்த ஆண்டு கடுமையான விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏற்றுமதிக்கு உகந்த விளைச்சல் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு உகந்ததாக இருப்பதால் அதன் விலை ஒரு கிலோவிற்கு ரூ.35 வரை விற்பனையாகி உள்ளது.
 இது குறித்து பிஏபி பகிர்மான குழுத் தலைவர் கண்டியன்கோவில் கோபாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் சின்னவெங் காயத்திற்கான சீதோஷ்ன நிலை சரியானபடி இல்லாததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைவான காலத்தில் விலை அதிகரிக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக தரமில்லாத வெங்காய விளைச்சலால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்யாமல் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அதுவும் விளைச்சல் குறைவுக்கு மிகப்பெரிய காரணம். எனவே விவசாயிகள் சின்ன வெங்காயம் அறுவடை செய்தபின் மாற்றுப் பயிராக ஏதாவது சாகுபடி செய்ய வேண்டும். பயிர் சுழற்சி முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
விலை சரிவு
இது குறித்து வெங்காய ஏற்றுமதியாளர் கே.கே. கந்தசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: -  இந்த ஆண்டு சரியான சீதோஷ்ண நிலை இல்லை என்பது உண்மைதான். இதனால் 3 முதல் 4 டன் அளவிற்கு மட்டுமே ஒரு ஏக்கருக்கு விளைச்சல் கிடைத்துள்ளது. அதுவும் ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லாமல் போனதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள், கோவில் விசேஷங்கள் இல்லாததும் சின்ன வெங்காயம் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். அப்பொதுதான் விளைச்சல் அதிகரிக்கும்.
 இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் விலையும் சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செலவில் பாதி அளவிற்கு கூட எடுக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு சின்ன வெங்காய சாகுபடியில் வேளாண்மை துறை மூலம் புதிய ஆலோசனைகளை வழங்குவதுடன், விவசாயிகளையும் மாற்றுப் பயிர் சாகுபடி முறையிலும், பயிர் சுழற்சி முறையிலும் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

-

Next Story