தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில் சேரலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில்  நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில் சேரலாம்  கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 8 Sept 2021 6:11 PM IST (Updated: 8 Sept 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நலவாரியம்
சென்னையை தலைமையிடமாக கொண்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் எந்தவொரு நாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த, 60 வயது நிறைவடையாத கலைஞர்கள் ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 31-ந் தேதிக்குள் ரூ.10 கட்டணம் செலுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்ள உரிய வழிவகைகள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கத் தகுதியுடைய கலைகள் பற்றிய விவரங்கள் அரசு ஆணையாக வெளியிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1242 நாட்டுப்புறக் கலைஞர்கள் இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர். இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நலத்திட்ட உதவிகள்
குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை ஆண்டு ஒன்றுக்கு (இரு வாரிசுகளுக்கு) ரூ.1000 முதல் ரூ.8 ஆயிரம் வரை, திருமண நிதியுதவி (உறுப்பினர்/ மகள்/ மகன்) (இரு முறை மட்டும்) ரூ.5 ஆயிரம், மகப்பேறு நிதியுதவி (பெண் உறுப்பினர்களுக்கு இரு முறை மட்டும்) ரூ.6 ஆயிரம், மூக்கு கண்ணாடி வாங்குவதற்கான உதவி (3 வருடத்துக்கு ஒருமுறை) ரூ.1500, இயற்கை மரணம் / ஈமச்சடங்குக்கானஉதவித் தொகை ரூ.25 ஆயிரம், விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
தற்போது செப்டம்பர் 1 முதல் தமிழக அரசால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது குழந்தைகள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து படிப்புச் சான்றிதழ்கள் மட்டுமே பெற்று கல்வி ஊக்கத் தொகை பெற உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்.
உறுப்பினராக...
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் சுமார் 3 ஆயிரம் கலைஞர்களுக்கு மேல் இருந்தும் இதுவரை குறைந்த எண்ணிக்கையில் தான் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ளனர். இதுவரை பதிவு செய்யாத நாட்டுப்புறக் கலைஞர்கள் உடனடியாக உறுப்பினர்களாக பதிவு செய்து அனைத்து நலத்திட்டஉதவிகள் பெற்றிட உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசுஅலுவலர் 'ஆ' குடியிருப்பு, நெல்லை - 07, தொலைபேசி எண்- 0462-2901890 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story