தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் போராட்டம்


தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 7:19 PM IST (Updated: 8 Sept 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூரில் ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு கடந்த 2-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

 வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆசிரியர் பயிற்சி பட்டய 2-ம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கடந்த 2-ந் தேதி வெங்கடேஸ்வரா பள்ளியின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சமரசம் செய்து தேர்வு எழுத வைத்தனர்.

இந்த நிலையில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு கற்பித்தல் தேர்வு இன்று நடந்தது. 

இந்த தேர்வை எழுத 243 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். 

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கும், செயின்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளிக்கும் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேர்வு மையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, தாசில்தார் செந்தில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் 2 தேர்வு மையங்களுக்கும் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து செயின்ட்மேரீஸ் தேர்வு மைய மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு தேர்வு எழுத சென்றனர். 

ஆனால் வெங்கடேஸ்வரா தேர்வு மையத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2-ந் தேதி ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தேர்வை புறக்கணிக்கிறோம் என்றனர். 

அதிகாரிகள் தொடர்ந்து பேசியும், மாணவர்கள் தேர்வு எழுத செல்லவில்லை. இந்த சம்பவத்தால் 2 தேர்வு மையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடக்கக்கல்வி பட்டய தேர்வை 116 மாணவர்கள் எழுதினார்கள். 127 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 3 தேர்வு மையங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையம், தேர்வறை கண்காணிப்பு பணியில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Next Story