முட்டை லாரியில் ரூ.50 ஆயிரம் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே முட்டை லாரியில் லிப்ட் கேட்டு வந்த திருநங்கைகள் ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசூர்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரை சேர்ந்தவர் அத்தியப்பன் மகன் லட்சுமணன்(வயது 32). டிரைவரான இவரும், ராசிபுரம் தொட்டியம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் ராமச்சந்திரன் (20) என்பவரும் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றனர்.
அங்கு முட்டைகளை விற்பனை செய்துவிட்டு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன் அதே லாரியில் இருவரும் நாமக்கல்லுக்கு புறப்பட்டனர்.
லிப்ட் கேட்டு ஏறிய திருநங்கைகள்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது 2 திருநங்கைகள் லிப்ட் கேட்டனர். உடனே டிரைவர் லட்சுமணன் லாரியை நிறுத்தினார். திருநங்கைகளுக்கு உதவி செய்யும் நோக்கில் 2 பேரையும், அவர் லாரியில் ஏற்றிக்கொண்டார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மின்வாரிய அலுவலக பகுதியில் லாரி வந்தபோது, 2 திருநங்கைகளும் அங்கேயே இறக்கி விடுமாறு கூறினர். இதையடுத்து டிரைவர், லாரியை நிறுத்தி 2 திருநங்கைகளையும் இறக்கி விட்டார்.
ரூ.50 ஆயிரம் திருட்டு
அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் லாரியில் இருந்த பணப்பையை டிரைவர் பார்த்தார். அதில் ரூ.50 ஆயிரம் மட்டும் காணவில்லை. அப்போதுதான், திருநங்கைகள் லிப்ட் கேட்டதுபோல் நடித்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லட்சுமணன், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற 2 திருநங்கைகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story