மனைவியை தேடி வந்த தொழிலாளிக்கு கத்திக்குத்து
மனைவியை தேடி வந்த தொழிலாளிக்கு கத்திக்குத்து
போத்தனூர்
பெரம்பலூர் அதியூர் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது38). தொழிலாளி. இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். உலகநாதன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த மனைவிக்கு, அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆறுதல் கூறினார்.
இதனால் அவர்கள் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த உலகநாதன் அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
அதன்படி உலகநாதனின் மனைவி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலன் ரமேசுடன், கோவை சுந்தராபுரம் பகுதிக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கி கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதை அறிந்த உலகநாதன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.
அவர், மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்து கள்ளக்காதலனுடன் தான் இருப்பேன் என்று கூறினார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கைது
உடனே கள்ளக்காதலன் ரமேஷ், உலகநாதனிடம் அங்கிருந்து சென்று விடுமாறு கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், உலகநாதனை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த உலகநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story