சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது


சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது
x
தினத்தந்தி 8 Sept 2021 11:03 PM IST (Updated: 8 Sept 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது

தர்மபுரி, செப்.9-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன்அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் புஷ்பராஜ், அண்ணாமலை, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் புவனேஸ்வர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திரசேகர், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட அமைப்பாளர் ராஜி, விசுவ இந்து பரிஷத் நிர்வாகி கனகராஜ் உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பேசியதாவது:-
அனுமதி இல்லை
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை. அவரவர் வீடுகள் முன்பு சிலைகள் வைத்து வழிபடலாம். அந்த சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதற்காக சிலைகளுடன் யாரும் ஊர்வலம் செல்லக்கூடாது. வீடுகள் முன்பு யார் சிலை வைக்கிறார்கள் என்பது குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். 
இந்த விழாவையொட்டி பொது இடங்களில் ஒலிபெருக்கி வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. எனவே அரசின் உத்தரவை மதித்து அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story