புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு


புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 8 Sept 2021 11:25 PM IST (Updated: 8 Sept 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு பெற்றதையொட்டி நேற்று பக்தர்கள் இன்றி கொடி இறக்கம் நடந்தது.

வேளாங்கண்ணி;
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு பெற்றதையொட்டி நேற்று பக்தர்கள் இன்றி கொடி இறக்கம் நடந்தது.
வேளாங்கண்ணி மாதா பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.
உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள்  திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 
இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணி பகுதியை சுற்றி உள்ள 19 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நிறைவு விழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.
விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story