விநாயகர் சதுர்த்தி விழா: திருப்பதிக்கு செல்லும் கொல்லிமலை கரும்பு-விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொல்லிமலை கரும்பு திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை கரும்பு
கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் மரவள்ளி, வாழைக்கு அடுத்தப்படியாக கரும்பும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அந்த கரும்புகள் நன்றாக வளர்ந்ததும் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு விற்பனைக்காக வெட்டி எடுத்து செல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஆந்திர மாநில வியாபாரிகள் கொல்லிமலைக்கு வந்து, கரும்பினை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான ஆந்திர மாநில வியாபாரிகள் படையெடுத்துள்ளனர்.
விலை உயர்வு
அவர்கள் விவசாய நிலங்களில் உள்ள கரும்பினை தொழிலாளர்கள் மூலம் வெட்டி, லாரிகளில் ஏற்றி விற்பனையாக கொண்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.5 விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கரும்பு ரூ.15-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே கோவை, மதுரை போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஜூஸ் தயாரிப்புக்காக முன்கூட்டியே கரும்புகளை வாங்கி சென்றனர். இதனால் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கரும்பு விலை உயர்ந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story