லாரி மோதி 4 மின் கம்பங்கள் சேதம்
புன்னம்சத்திரம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் 4 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
நொய்யல்,
மின் கம்பங்கள் சேதம்
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா மேச்சேரி அருகே விருதாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (54), லாரி டிரைவர். இவர் லாரியில் பாரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பஞ்சங்குட்டை நால்ரோடு அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த 4 மின்கம்பங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மின்கம்பங்களும் முற்றிலும் சேதமடைந்தன.
டிரைவர் கைது
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனைதொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த கம்பத்தின் வழியாக சென்ற மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 4 மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பஞ்சங்குட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்வினியோகம் தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த புன்னம்சத்திரம் மின்வாரிய இளம் பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) செந்தில் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கோவிந்தசாமியை கைது செய்தார். மேலும் விபத்திற்கு காரணமான லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story