பழனியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் திடீர் தீ
பழனியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பழனி:
பழனியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
பழனி தபால் நிலையம் அருகே ஸ்டேட் வங்கி சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் ஆர்.எப்.ரோடு-தாராபுரம் சாலையை இணைக்கும் பகுதியாக உள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை ஒன்று உள்ளது. இங்கு மிக்சி, கிரைண்டர், கியாஸ் அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அங்கு கியாஸ் அடுப்பு பழுது நீக்கம் செய்தபோது, திடீரென்று தீப்பிடித்தது. இதையடுத்து அங்கிருந்த கடை ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அடுத்தடுத்து உள்ள பொருட்களில் தீ பரவியதால் கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதற்கிடையே கடையில் இருந்து கரும்புகை மூட்டம் வெளியானதால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியே ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
1 மணி நேரம் போராடி
அதன்பேரில் நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படைவீரர்கள் கடைக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் அங்கிருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த தீ விபத்தால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story