நிலக்கோட்டைஒன்றிய அலுவலகத்தில் துணைத்தலைவருடன் வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள்; நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு


நிலக்கோட்டைஒன்றிய அலுவலகத்தில் துணைத்தலைவருடன் வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள்; நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sept 2021 1:01 AM IST (Updated: 9 Sept 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டைஒன்றிய அலுவலகத்தில் நடந்த அவசர கூட்டத்தின் போது துணைத்தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நாற்காலிகளை தூக்கி கவுன்சிலர்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டைஒன்றிய அலுவலகத்தில் நடந்த அவசர கூட்டத்தின் போது துணைத்தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நாற்காலிகளை தூக்கி கவுன்சிலர்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவசர கூட்டம்
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அவசர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், 2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.1 கோடியே 26 லட்சம் நிதி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அந்த நிதியை பயன்படுத்தி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வாக்குவாதம்
அதன் பின்னர் கூட்டத்தை முடித்துக்கொள்ளலாமா? என்று தலைவர் கேட்டார். அப்போது துணை தலைவர் யாகப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் வேறு கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. அப்படி இணைய முடிவு செய்தால் அவர்கள் தங்களின் தற்போதைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் துணை தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த நாற்காலியை பாலமுருகன் எடுத்து கீழே வீசினார். இவருக்கு ஆதரவாக வந்த ஒன்றிய கவுன்சிலர் நாகராஜனும் மற்றொரு நாற்காலியை தூக்கி வீசினார். நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே அங்கு வந்த மற்ற கவுன்சிலர்கள், துணை தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது கவுன்சிலர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சின்னமாயன் என்ற அறிவழகன் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பிரித்து கொடுப்பதில் ஒன்றியக்குழு தலைவரும், துணை தலைவரும் பாரபட்சமாக செயல்படுகின்றனர். எனவே தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றனர். 
இந்த நிலையில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். பின்னர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் அவசர கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story