லாரி கவிழ்ந்து மின் கம்பங்கள் சாய்ந்தது; புது மாப்பிள்ளை படுகாயம்
லாரி கவிழ்ந்து மின் கம்பங்கள் சாய்ந்ததில் புது மாப்பிள்ளை படுகாயம் அடைந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனையில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் கும்பகோணத்திற்கு புறப்பட்ட லாரி, அந்த கிராமத்தின் வழியாக சென்றது. லாரியை டிரைவர் மணிவேல் ஓட்டினார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகே உள்ள குறுகிய சாலையில் எதிரே வந்த வாகனங்களுக்கு வழி விடுவதற்காக லாரி நின்றபோது பாரம் தாங்காமல் கால்வாயின் தடுப்புச்சுவர் உடைந்ததில், லாரி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் 2 மின்கம்பங்களும் சாய்ந்தன. அப்போது அருகே நின்ற ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் குமார் (வயது 28) மீது ஒரு மின்கம்பம் விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த குமாருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது. லாரி கவிழ்ந்து மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் எசனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சாய்ந்த மின்கம்பங்களுக்கு பதிலாக, புதிய கம்பங்களை நட்டு மின் துண்டிப்பை சரிசெய்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story