நாகர்கோவிலில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது


நாகர்கோவிலில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2021 9:02 PM GMT (Updated: 8 Sep 2021 9:02 PM GMT)

நாகர்கோவில் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரைகளுடன் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின.

நாகர்கோவில்:
நாகர்கோவில் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரைகளுடன் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின.
அதிரடி சோதனை
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் போதை மாத்திரைகள் மற்றும் பொடிகள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், முருகன் மற்றும் தனிப்படை போலீசார் விடுதிக்கு விரைந்து வந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 3 வாலிபர்கள் போதையில் தள்ளாடியடி இருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த அறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
போதை மாத்திரைகள்
அப்போது அங்கு போதை மாத்திரைகள் மற்றும் பொடிகள் இருந்தன. அதைத்தொடர்ந்து 3 பேரையும் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
போலீசாரிடம் சிக்கியவர்களில் 2 பேர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது அஸ்லான் (வயது 22), முகமது ஷாபி (32). இவர்கள் 2 பேரும் உறவினர். இன்னொருவர் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ஷாஹீன் கான் (19).
3 பேர் கைது
இவர்கள் கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் புரோக்கர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் போதை மாத்திரை மற்றும் பொடிகளை வாங்கி வந்து, குமரி மாவட்டத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து முகமது அஸ்லான், முகமது ஷாபி, ஷாஹீன் கான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 3 பேருக்கும், சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-
பொதுமக்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. எங்காவது போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். 
தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த போதை பொருட்கள் மிகவும் ஆபத்தானவை ஆகும். சிறிய அளவில் பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
அதாவது மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் 6.47 மில்லி கிராமும், எல்.எஸ்.டி (ஸ்டாம்பு) எனப்படும் லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு என்னும் போதைப்பொடி 0.41 மில்லி கிராமும், எம்.டி.எம்.ஏ. (சப்கா) எனப்படும் மெத்திலின் டைஆக்சி மெத்தம்பேட்டமைன் என்னும் போதை மாத்திரை 0.71 மில்லி கிராம் மற்றும் நிட்ராவட் எனப்படும் 3 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
தடை செய்யப்பட்டவை
இந்தவகையான போதை பொருட்கள் இன்றளவில் குமரி மாவட்டத்தில் பிடிபட்டதில்லை. இவை அனைத்தும் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆகும்.
இத்தகைய போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நாள் முழுவதிலும் இருந்து 3 நாட்கள் வரை போதை இருக்கும். மேலும் இத்தகைய போதை பொருட்கள் குமரி மாவட்டத்தில் தற்போது தான் முதன்முதலில் நுழைந்துள்ளது. அதை ஆரம்பத்திலேயே போலீசார் பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story