அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Sept 2021 2:53 AM IST (Updated: 9 Sept 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

சேலம்
ஊராட்சிக்குழு கூட்டம்
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் அதன் தலைவர் ரேவதி ராஜசேகரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் பேசினர்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் குழாய் அமைத்தல், சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைத்தல், ஆழ்துளை கிணறு, கான்கிரீட் தளம், தடுப்பு சுவர், சுகாதார வளாகம், பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.18 லட்சத்தில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது.
சமமாக நிதி ஒதுக்கீடு
இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சின்னுசாமி, பழனிசாமி ஆகியோர் பேசும்போது, துணைத்தலைவர் உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு மட்டும் ரூ.20 லட்சத்திற்கு மேல் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, கட்சி பாகுபாடின்றி அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் மேம்பாட்டு பணிகளுக்கு சமமாக நிதி ஒதுக்க வேண்டும், என்றார்.
இதற்கு பதில் அளித்து தலைவர் ரேவதி ராஜசேகரன் பேசுகையில், பெரிய வார்டாக இருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இனிவரும் காலங்களில் அனைத்து வார்டுகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்து பிரித்து வழங்கப்படும், என்றார்.
கட்டிடத்தை புதுப்பிக்க...
ஏற்காட்டை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் புஷ்பராணி பேசுகையில், ஏற்காட்டில் மாவட்ட ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எங்கு இருக்கிறது. அதுபற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும். அதேபோல், மாவட்டம் முழுவதும் இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருந்தால் அதையும் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், என்றார்.
இதையடுத்து மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலக கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளதாகவும், எனவே, புதிய அலுவலகம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று சில கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதற்கு தொன்மை மாறாமல் ஏற்கனவே உள்ள கட்டிடத்தை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் சேகர் தெரிவித்தார்.


Next Story